தருமபுரி, ஆகஸ்ட் 23, 2025 (ஆவணி 7):
அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கில், தருமபுரி நீதித்துறை சார்பாக பாலின உணர்திறன் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி நடத்தப்பட்ட இந்த நிகழ்வை, தருமபுரி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி சி. திருமகள் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் தருமபுரி கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் பாலின விழிப்புணர்ச்சி, உள் புகார் குழு தலைவர் திருமதி யு. மோனிகா அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் Changing Gender Roles: Cultural, Philosophical and Psychological Perspectives, From others to one’s own – The feminist voices that matter, Education and Women Empowerment, Cyber Harassment against Women and Children போன்ற தலைப்புகளில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் சிறப்பு கருத்துரைகள் ஆற்றினர். பாலின சமநிலை, பெண்கள் அதிகாரமடைதல், இணையதள தொல்லைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு போன்ற முக்கிய அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். எஸ். மகேஸ்வரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் திருமதி பி. கே. தமயந்தி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மரு. அனிதா தாமரைசெல்வி, அரசு பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் முனைவர் பி. பிரேம்குமார், முனைவர் எம். கண்ணப்பன், திருமதி பி. ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.