பாலக்கோடு, ஆக. 23 (ஆவணி 7):
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சிக்கார்தனஅள்ளி கரக செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான 33 ஏக்கர் 42 சென்ட் நிலம், இந்து அறநிலைய துறையின் மேற்பார்வையில் பொது ஏலத்தில் விடப்பட்டது. கோயிலுக்கு சொந்தமான நிலம் நீண்ட காலமாக ஏலத்தில் விடப்படாமல் இருந்ததால், கோவில் பராமரிப்பு மற்றும் பூஜைச் செலவுகளுக்கு தேவையான வருவாய் குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்ற உத்தரவின்படி கோவில் நிலம் ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கையாக நிலம் அளவீடு பணி கடந்த வாரம் நிறைவுற்ற நிலையில், இந்து அறநிலைய துறை ஆய்வாளர் கோமதி தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் நடத்தப்பட்டது. இதில், கோயிலுக்கு சொந்தமான 33.42 ஏக்கர் நிலம் ரூ. 8,73,800க்கு ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகை கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டது. ஏலம் நடைபெற்ற இடத்தில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.