தருமபுரி, ஆக. 19 | ஆவணி 3 –
இந்திய விமானப்படையில் அக்னிவீர் (வாயு) (OS) பணிக்கான ஆட்சேர்ப்பு பேரணி, சென்னை தாம்பரம் விமானப்படை வளாகத்தில் வரும் செப்டம்பர் 2 மற்றும் 5, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதி நிபந்தனைகளில், பன்னிரண்டாம் வகுப்பு (எந்தப் பிரிவும்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.
வயது வரம்பு 01.01.2026 அன்று அடிப்படையாகக் கொள்ளப்படும். அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 17 ½ வயதிற்கு மேல் மற்றும் 21 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் முன்னணி நாளிதழ்களில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.