தருமபுரி, ஆக. 19 | ஆவணி 3 –
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மக்களின் இல்லங்களுக்கே அரசுத் துறைகளின் சேவைகளை கொண்டு சேர்க்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை கடந்த ஜூலை 15 அன்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக, இன்று தருமபுரி ஒன்றியத்தின் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பட்டா மாற்ற ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மின்சார இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள், மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.
திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 3 வரை 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. மனுக்கள் உடனடியாகத் தீர்வு காணக்கூடியவைகளுக்கு உடனடியாகவும், பிறவற்றிற்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என ஆட்சித்தலைவர் கூறினார்.
இந்த நிகழ்வுகளில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, நகராட்சி தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையர் திரு. சேகர் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.