Type Here to Get Search Results !

இனி உடனடி பயிர்க்கடன் வழங்கும் திட்டம் முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.


தருமபுரி, ஆகஸ்ட் 17, 2025 (ஆவணி 1):


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2025) தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகள் இணையவழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். தமிழ்நாட்டில் இதுவே முதல் முறையாக முன்னோடி (Pilot) திட்டமாக தருமபுரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தற்போது, விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் பயிர்க்கடன் பெறும் நடைமுறை நிலவுகிறது. இந்த நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், புதிய திட்டத்தின் கீழ் இணையவழியில் விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கடன் தொகை வரவு செய்யப்படும்.


விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களில் அல்லது இணையவழியாக, தங்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் எண் அல்லது மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணைக் கொண்டு எளிதாக விண்ணப்பிக்கலாம். நிலம் தொடர்பான விவரங்கள் வருவாய்துறையிலிருந்தும் பயிர்சாகுபடி விவரங்கள் வேளாண் துறையிலிருந்தும் இணையவழியாகப் பெறப்பட்டு, விண்ணப்பத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட கடன் சங்கத்திற்கு அனுப்பப்படும். சங்க செயலாளர், வங்கி கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் இவ்விவரங்களை கணினி வழியாக சரிபார்த்து, கடன் தொகையை அன்றே விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவார்கள்.


இத்திட்டத்தை துவங்கிய அடையாளமாக அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைச் சேர்ந்த ஐந்து விவசாயிகளுக்கு முதல்வர் அவர்களால் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இத்திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும், படிப்படியாக சுயஉதவிக் குழுக்கள், சிறு மற்றும் குறு தொழில்களுக்கு தேவையான கடன்களும் இணையவழியாக விண்ணப்பித்த அன்றே பெறும் வகையில் விரிவாக்கப்படும்.


தருமபுரி மாவட்டம், மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம் தொடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். 1989 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அவர்கள் இத்திட்டத்தை துவங்கிவைத்தார். அதேபோன்று, 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் 117 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே, இன்று பயிர்க்கடன் வழங்கும் புதிய இணையவழி திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் க.நந்தகுமார், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies