தருமபுரி, ஆகஸ்ட் 16 | ஆடி 31 :
மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தருமபுரி வருவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் தெரிவித்துள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு, 'இது நம் ஊர் தானா?' என்று வியக்கும் அளவுக்கு தெருக்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், தருமபுரிக்கு பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை என்று அவர் விமர்சித்தார். குறிப்பாக, 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டைத் திட்டம் பத்தொன்பது ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், அடிக்கல் நாட்டப்பட்ட பிறகும் இதுவரை ஒரே ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படாதது கவலைக்குரிய விஷயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், “தேர்தலுக்கு முன்பாகவே தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை செயல்பாட்டுக்கு வரும்” என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தெரிவித்தார். இது மக்களின் பெரும் எதிர்பார்ப்பு என்றும், அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதியாக மட்டும் இருந்து விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.