மகேந்திரமங்கலம், ஆக 03 | ஆடி 18 -
தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள சீங்கேரி கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை (70) என்ற மூதாட்டி, சொத்து தகராறில் தாக்கப்பட்டு தீவிர காயமடைந்தார். பாஞ்சாலையின் கணவர் சின்னசாமி உயிருடன் இருந்தபோது, அவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், விவசாய கிணற்றுக்கான மின்சார இணைப்பை பெற 60 சென்ட் பகுதியை, மூத்த மகன் மாதையன் பேரில் கிரயமாக மாற்றியிருந்தார். சின்னசாமி மறைந்த பிறகும், நிலம் பங்கீடு செய்யப்படாமல் குடும்பத்தினர் கூட்டாகவே விவசாயம் செய்து வந்தனர்.
சமீபத்தில், கிரயமாக இருந்த நிலத்தை மாதையன் தனது உடன்பிறந்தவர்களுக்கு தெரியாமல், வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை, மாதையன் திமுக நிர்வாகி மற்றும் சில குண்டர்களுடன் பாஞ்சாலையின் வீட்டுக்கு சென்று, அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றார். மூதாட்டி மறுத்ததால், அவர் மீது தாக்குதல் நடத்தி, குடிசையை இடித்து, அருகிலுள்ள கிணற்றில் தள்ளியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த படுக்கை விரிப்புகள், துணிகள், உணவுப் பொருட்களையும் கிணற்றில் வீசி சேதப்படுத்தினர்.
படுகாயமடைந்த பாஞ்சாலையை உறவினர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். திமுக தொடர்புடைய நிர்வாகி தாக்குதல் நடத்தியதால், தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.