தருமபுரி, ஆகஸ்ட் 11 | ஆடி 26 –
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி நிகழ்ச்சி இன்று காணொலி காட்சி மூலம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுடன் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்வுக்கு முன்னதாக, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, தெருவோரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, சுயஉதவிக்குழு பெண்கள் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
பின்னர், போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாரதி கலைக்குழுவின் நாடகம், கிருஷ்ணா பார்மசி கல்லூரி மாணவிகளின் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், கல்லூரி கல்வி இணை இயக்குநர் திருமதி. ராமலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் மரு. சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பூபேஸ், உதவி ஆணையர் (ஆயம்) திருமதி. நர்மதா, வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, நகர நல அலுவலர் மரு. லட்ஷிய வர்ணா, துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமல் பிரிவு), நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு. பிரசன்னா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.