தருமபுரி, ஆகஸ்ட் 11 | ஆடி 26 -
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாணவ, மாணவியர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டு, தேசிய குடற்புழு நீக்க தின உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது.
மொத்தம் 4.92 இலட்சம் பயனாளிகளுக்கு மாத்திரை வழங்கப்படுகிறது. இதில் 1–19 வயது குழந்தைகள் 3.91 இலட்சமும், 20–30 வயது பெண்கள் 1.00 இலட்சமும் (கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) அடங்குவர். மாத்திரை வழங்கும் நிகழ்வு இன்றிருந்து (11.08.2025) தொடங்கியுள்ள நிலையில், விடுபட்டவர்களுக்கு வரும் 18.08.2025 அன்று வழங்கப்படும். 1–2 வயது குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அரை மாத்திரை, 2–19 வயது மற்றும் 20–30 வயது பெண்களுக்கு 400 மில்லி கிராம் முழு மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த முகாமில் 2,023 அங்கன்வாடி பணியாளர்கள், 1,644 ஆசிரியர்கள், 244 சுகாதாரத்துறை பணியாளர்கள், 123 ஆஷா பணியாளர்கள் என மொத்தம் 4,034 பேர் ஈடுபட்டுள்ளனர். குடற்புழு தொற்று, இரத்தசோகம், ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி தடை போன்றவற்றை தடுக்கவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல் மற்றும் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும் இந்த மாத்திரைகள் உதவுகின்றன.
மாத்திரைகள் அனைவருக்கும் பாதுகாப்பானவை என்பதோடு, நன்றாக கடித்து மென்று சாப்பிட வேண்டும் என ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், சுகாதார பழக்கவழக்கங்கள் கடைபிடிப்பு – கழிவறை பயன்படுத்துதல், கைகள் சுத்தம் செய்தல், காய்கறி மற்றும் பழங்களை நன்கு கழுவுதல், காலணிகள் அணிதல் போன்றவை – குடற்புழு தொற்றைத் தடுக்க உதவும் என தெரிவித்தார். “வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு, தொற்றில்லா, இரத்தசோகம் இல்லா தமிழ்நாடு உருவாக்குவோம்” என மாணவர்கள் உறுதி கூறினர்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், பல்வேறு துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.