பாலக்கோடு, ஆக. 12 | ஆடி 27 –
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (29) என்பவர், கர்நாடகா மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி புரட்சிகொடி (26), 5 வயது மகள், 3 வயது மகன் உள்ளனர். கடந்த வாரம் ஊருக்கு வந்த தினேஷ், இந்த மாதம் 4ம் தேதி காலை வேலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் வேலை செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. அவரின் செல்போனும் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது.
இதையடுத்து, கணவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று மனைவி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கூலி தொழிலாளி தினேஷை தீவிரமாக தேடிவருகின்றனர்.