தருமபுரி, ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொருட்களில் உணவு பரிமாறும் உணவகங்களுக்கு மாநில அரசு விருது வழங்கப்படவுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் நெறிமுறைகளை பின்பற்றி, சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பரிமாற்றத்தை வழங்கும் உணவகங்கள் தேர்ந்தெடுக்கப்படும். வருடாந்திர விற்பனை ரூ.12 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெரிய உணவகங்களுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும். அதேபோல் தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு உணவகங்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் பரிசீலனை செய்து, கள ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகள் மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பப்படும். பின்னர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெரிய உணவகமும், ஒரு சிறு உணவகமும் சிறந்த உணவகங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் உணவகங்களில், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் நடைமுறையில் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு பணியாளர் உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அனைத்து பணியாளர்களும் தொற்றுநோயற்றவர்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம். அத்துடன் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் அங்கீகரித்த நிறுவனங்களின் சுகாதார தணிக்கை அறிக்கைகள், அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களுக்கான மதிப்பீடு அறிக்கைகள், மற்றும் தாமே மேற்கொண்ட தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்ததாவது, அனைத்து உணவு வணிகர்களும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்கும் தன்மையுள்ள பொருட்களை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் விருதைப் பெற முனைவது அவசியம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.