தருமபுரி, ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
தருமபுரி மாவட்ட விவசாயிகள் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 2025–26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் வாழை, வெங்காயம், மஞ்சள், தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். இந்தத் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது.
கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் நேரடியாக பதிவு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். காப்பீடு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கள், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
பயிர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீடு: வாழைக்கு ரூ.38,350, மஞ்சளுக்கு ரூ.83,150, வெங்காயத்திற்கு ரூ.42,250, கத்திரிக்காய்க்கு ரூ.29,850, வெண்டைக்கு ரூ.26,100, தக்காளிக்கு ரூ.37,250.
பிரீமியம் கட்டணம்: வாழை – ரூ.1,918, மஞ்சள் – ரூ.4,158, வெங்காயம் – ரூ.1,656, கத்திரிக்காய் – ரூ.421, வெண்டை – ரூ.462, தக்காளி – ரூ.995 (ஒரு ஏக்கருக்கு).
காப்பீடு செய்ய இறுதி தேதிகள்: வெங்காயம், தக்காளி, வெண்டை, கத்திரிக்காய் – 01.09.2025 மற்றும் வாழை, மஞ்சள் – 16.09.2025.
விவசாயிகள் காப்பீடு செய்யும்போது தாங்கள் சாகுபடி செய்துள்ள புல எண், பரப்பளவு, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சரிபார்த்து, ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளை சமாளிக்க, அனைவரும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார். மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.