பாலக்கோடு, ஆகஸ்ட் 12 | ஆடி 27 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி ஊராட்சியின் சமத்துவபுரம் செல்லும் தார்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், குண்டும் குழியும், சேறும் சகதியுமாக உள்ளதால், ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை தொடர்கிறது. இந்தச் சாலை, சமத்துவபுரம், மூங்கப்பட்டி, கக்கன்ஞ்சிபுரம், தளவாய்ஹள்ளி புதூர், ரெட்டியூர், வீஸ்டேரிபள்ளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் முக்கியப் பாதையாகும். பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் கரும்பு உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங்களும் இவ்வழியாகச் செல்கின்றன.
மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதியுறுகின்றனர். மேலும், பள்ளங்கள் மற்றும் பாதை சேதம் காரணமாக விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து, சாலையைச் சீரமைத்து, புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.