பாலக்கோடு, ஆகஸ்ட் 12 | ஆடி 27 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளியில் இருந்து ஜெர்த்தலாவ் வரை 5 கிலோமீட்டர் தூரத்தில் புதிய கால்வாய் அமைத்து, எர்ரனஅள்ளி, மேகலம்பட்டி, கரகதஅள்ளி, ஜெர்த்தலாவ், புலிக்கரை ஏரி உட்பட 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக்கால உபரிநீர் வழங்கும் திட்டம், ரூ. 30.38 கோடி மதிப்பீட்டில் 2022-ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களால் தொடங்கப்பட்டது.
ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், 5 கிலோமீட்டர் தூரம் உள்ள கால்வாய் இணைப்பு முழுமையாக முடிக்கப்படாமல் பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இந்தக் காலத்தில் பல பருவ மழைகளில் சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடலில் கலந்துவிட்டது. நீர்வழி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமை காரணமாக, திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இப்பகுதியில் காய்கறி, பழம், பூ, கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் கடும் வறட்சியால் பாதிப்படைந்து, விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி, விவசாயிகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.