பென்னாகரம், ஆகஸ்ட் 01 | ஆடி 16 -
சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கலைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் உட்கருத்தை வெளிக்கொணரும் விதமாக கதை, பாடல், நாடகம், ஓவியம், நடனம், பொம்மலாட்டம், எளிய பொருள்களைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்தல், காகித மடிப்பு (ஓரிகாமி) உள்ளிட்ட பயிற்சிகளை மதுரை டிராமா செல்வம் வழங்கினார்.
மாணவர்களுக்கு எளிய முறையில் ஒரு கதையை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் அறிமுகம், பிரச்சனை, முயற்சி, முடிவு போன்ற கூறுகளை இணைத்து கதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளும் வழிகளை கற்றுக்கொடுத்தார். மேலும், அனைத்து பயிற்சிகளும் மாணவர்கள் எளிதில் புரிந்து செயல்படுத்தக்கூடிய வகையில் நடத்தப்பட்டன.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் மா. பழனி செய்திருந்தார். கல்வி–40 அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்த், ஆசிரியர்கள் பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, கலைச்செல்வி, அனுப்பிரியா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.