அரூர், ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
தருமபுரி மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கம் சார்பில் அரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நிருபர்களைச் சந்தித்தார்.
“மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அரூரில் வேளாண் கல்லூரி அமைப்பது குறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்தத் திட்டம் நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் குடிநீர் தேவைக்குப் பெரும் ஆதாரமாகும். இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் சட்டசபையிலும் பேசியுள்ளேன்; முதல்வரிடம் எடுத்துரைத்தேன். விரைவில் திட்டம் நிறைவேறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தேர்தலுக்காக மட்டும் தேர்தல் பணி செய்வதில்லை; எப்போதும் மக்களுக்காகவே பணி செய்து கொண்டு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை சங்கர் IAS அகடாமி நிறுவனர் வைஷ்ணவி அவர்கள் கலந்து கொண்டார். மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜி. அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட செயலாளர் கே.பி. இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் பி.எம். இளங்கோ, தருமபுரி மத்திய மாவட்ட செயலாளர் அருணாச்சலம், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வஜிரவேல், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மனோகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மேலும், மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர, பஞ்சாயத்து, கிளை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.