பாலக்கோடு, ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சிக்கார்தனஅள்ளி கரக செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பான விவகாரம் தீர்வு காணும் நோக்கில் இன்று போலீசார் முன்னிலையில் அளவீட்டு பணி தொடங்கியது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதன் காரணமாக கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பதால், பராமரிப்பு பணிகள் மற்றும் பூஜைகள் செய்ய முடியாமல் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தும் ஏன் பொது ஏலம் விடப்படவில்லை என ஆய்வாளர் கோமதியிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அறநிலையத் துறை ஆய்வாளர் கோமதி, 15 நாட்களுக்குள் பொது ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு, பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், இந்து அறநிலைய துறை தாசில்தார் லட்சுமி, ஆய்வாளர் கோமதி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் அளவீட்டு பணி தொடங்கியது. மேலும், அதிகாரிகள் தெரிவித்ததாவது, நிலம் அளவீடு நிறைவடைந்ததும், கோயிலுக்கு சொந்தமான நிலம் பொது ஏலம் விடப்படும் என்று கூறினர்.