பொம்மிடி, ஆக 03 | ஆடி 18 -
பொம்மிடி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் இருப்புப் பாதை காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத்தலைவர் பா. ஜெபசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பா. ஜெபசிங் தெரிவித்தததாவது: “பொம்மிடி ரயில் நிலையம் வழியாக தினமும் 16 ரயில்கள் நின்று செல்கின்றன. பொதுவாக ரயில் நிலையங்களில், ரயில்வே துறையின் பாதுகாப்பு படையினரும், தமிழ்நாடு அரசின் இருப்புப் பாதை காவல் நிலையமும் செயல்பட்டு, பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள். ஆனால், பொம்மிடியில் இவ்விரண்டு பாதுகாப்பு வசதிகளும் இல்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கோரிக்கைக்கு பதிலளித்த சேலம் உட்கோட்ட இருப்புப் பாதை துணை காவல் துறை கண்காணிப்பாளர், “இருப்புப் பாதை காவல் நிலையம் அமைப்பது தொடர்பான முடிவு, தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே துறை இணைந்து எடுக்க வேண்டியதாகும்” என்று பரிந்துரை செய்துள்ளார். நூற்றுக்கணக்கான பயணிகள் தினசரி பயன்படுத்தும் பொம்மிடி ரயில் நிலையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாதது, பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.