பாலக்கோடு, ஆக 04 | ஆடி 19 -
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அமானிமல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மருதுபாண்டி (30) நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் அமானிமல்லாபுரத்தில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
குண்டுபள்ளம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற மிதிவண்டியை முந்த முயன்றார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தால் மோட்டார் சைக்கிளின் நிலை தடுமாறி, மருதுபாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக, மருதுபாண்டியின் மனைவி கௌரவம்மாள் அளித்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.