ஒகேனக்கல், ஆகஸ்ட் 02 | ஆடி 17 -
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, பாதுகாப்பு கருதி கடந்த 6 நாட்களாக குளிப்பதற்கும் பரிசல் இயக்கத்துக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு, ஒகேனக்கலில் நீர்வரத்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வரை உயர்ந்தது. இந்த அதிக நீர்வரத்து காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதும், பரிசல் இயக்கமும் தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 18,000 கனஅடியாகவும், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16,000 கனஅடியாகவும் குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து, நேற்று சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று, 6 நாட்களுக்குப் பிறகு, குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.