ஓகேனக்கல், ஆக 02 | ஆடி 17 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஒகேனக்கலில் மூன்று நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா – 2025 இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழா தொடக்கத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும், பல துறைகளின் பல்துறை பணி விளக்கக் கண்காட்சிகளும் திறந்து வைக்கப்பட்டன.
விழாவில் மொத்தம் 301 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய்த் துறையின் சார்பில் 190 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை; மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.66 லட்சம் கடன் உதவி; வேளாண்மைத் துறையின் சார்பில் சொட்டு நீர்பாசனம், துவரை நாற்று நடவு உள்ளிட்ட உதவிகள்; சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி; தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலை, வனத்துறை மற்றும் கேபிள் டிவி நிறுவன உதவிகள் ஆகியவை அடங்கும்.
மேலும், “நாடு போற்றும் 4 ஆண்டு… தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட நான்காண்டு சாதனை மலரை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டார். தனது உரையில், தமிழ்நாட்டில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்வது, சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான துரித நடவடிக்கைகள், ஒகேனக்கல் மற்றும் வத்தல்மலை சுற்றுலா தல மேம்பாட்டுக்கு ரூ.19.81 கோடி மதிப்பிலான பணிகள், மற்றும் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.
ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சுத்தமாகவும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி இல்லாத தலமாகவும் பராமரிக்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, பல்வேறு அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா 04.08.2025 வரை நடைபெறும்.