பொம்மிடி – ஆகஸ்ட் 27, 2025 (ஆவணி 11)
விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான திருவிழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று, விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பையர்நத்தம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா அதிகாலை முதலே பக்தி பரவசத்துடன் தொடங்கி நடைபெற்றது. பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனையில் ஈடுபட்டனர்.
வரலாற்று குறிப்புகளின்படி, 5ஆம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவனின் படையில் தளபதியாக இருந்த சைவப் பெரியார் சிறுத்தொண்ட நாயனார், விநாயக வழிபாட்டைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார் எனப்படுகிறது. இருப்பினும், 18ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு அதிகரித்தது.
தமிழகமெங்கும் இவ்விழாவை முன்னிட்டு ஊரகங்கள், நகரங்கள் அனைத்திலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்படுகின்றன. இச்சிலைகள் சுமார் முக்கால் அடி உயரத்திலிருந்து 70 அடி வரை பல வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளில், ஊர் அருகிலுள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
வீடுகள் மற்றும் கடைகளிலும் சிறிய மண் சிலைகள் நிறுவி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்து விநாயகர் பூஜை செய்வது வழக்கம்.