தருமபுரி, ஆக 27 (ஆவணி - 11) -
தருமபுரி நகராட்சியருகில் உள்ள அண்ணாமலை கவுண்டர் தெருவில் 22-ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர் சிலை அமைக்கப்பட்டு காலை, மாலை என இரு நேரங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், தருமபுரி மோட்டார் மெக்கானிக் சங்கம் மற்றும் ஸ்ரீ விநாயகா நற்பணி மன்றம் சார்பில் ராஜகோபால் கவுண்டர் தெருவில் 23-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சையாக நடைபெற்றது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா குழுவினர், நற்பணி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதோடு, தருமபுரி மதிகோன்பாளையம் ராமக்கால் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் 27-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீ சக்தி விநாயகருக்கு 12 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு உபசார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு சாமி திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது.