தருமபுரி, ஆகஸ்ட் 10 (ஆடி 25):
தருமபுரி மாவட்டம், அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமாவளவன் பேசுகையில், இக்கூட்டம் கட்சிக்கு மாநில அங்கீகாரம் கிடைத்ததை கொண்டாடவும், ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ள தனது பிறந்தநாள் விழாவிற்கும், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற "மதச்சார்பின்மை காப்போம்" மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கவும் ஒருங்கிணைக்கப்பட்டதாக கூறினார்.
இது தமிழகத்தில் அரூரில் முதன்முறையாக நடத்தப்பட்ட தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம் என்றும், இதில் ₹27 லட்சம் திரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். “அ” என்ற எழுத்தால் தொடங்கும் அரூரில் இருந்து தொடங்கிய இந்த முயற்சி, வரவிருக்கும் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்புவதாகக் கூறினார்.
தற்போது கட்சியில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், இது கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமான தருணம் எனவும் குறிப்பிட்டார். மதச்சார்பின்மை காக்க வேண்டியது அவசியம் என்றும், இதற்கு எதிரான அரசியல் மற்றும் சமூக சக்திகளை எதிர்கொள்வோம் என்றும் உறுதியளித்தார். பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் மற்றும் தி.மு.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.