தருமபுரி, ஆக.25 | ஆவணி 9:
தருமபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், புகழ்பெற்ற ஆன்மீக பிரசங்ககரும், பக்தி இலக்கிய அறிஞரும், சைவ சித்தாந்தப் புலவருமான திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, சுவாமிகளின் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உள்ளூர் மக்கள், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிக அளவில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தமிழில் பண்டைய சைவ இலக்கியங்களை எளிமையாக பொதுமக்களுக்கு விளக்கி, ஆன்மீக விழிப்புணர்வை பரப்பியவர். பாகவதம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை உருக்கமான குரலில் பாடி, சிறப்பான உபன்யாசங்களால் பக்தர்களை கவர்ந்தவர். இந்தியா முழுவதும் ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்கிய அவர், "தமிழ் சைவ புலவர்" என போற்றப்படுகிறார்.