பொம்மிடி, ஆகஸ்ட் 25, 2025 (ஆவணி 9):
இந்தக் கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. A. கோவிந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திரு. அன்வர், பா.ம.க. சார்பில் திரு. அறிவழகன், காங்கிரஸ் நகரத் தலைவர் திரு. ராபர்ட், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட செயலாளர் திரு. அசோகன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் திரு. ரகு, திரு. தமிழ், தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து திரு. கார்த்திகேயன், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திரு. கணேசன் மற்றும் பல்வேறு சமூக, தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் திரு. பழனியப்பன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் திரு. ரகுநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு உறுதியளித்தனர்.
கூட்டத்தில் முதன்மையாக பொம்மிடி ரயில் நிலையம் தொடர்பான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வரும் ரயில் நிலைய திறப்பு விழாவுக்கு முன் குறைந்தது இரண்டு விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படாவிட்டால் திறப்பு நாளிலேயே கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அரக்கோணம்–சேலம் ரயில் தினசரி இயக்கப்பட வேண்டும் என்றும், டேனிஷ்பேட்டை மற்றும் தொங்கனூரில் ரயில் நிறுத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வளர்ச்சி சார்ந்த பிரிவில், பொம்மிடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும், பொம்மிடி–ஏற்காடு சாலை வசதி விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும், காளிக்கரம்பு–தர்மபுரி சாலை காலம் தாழ்த்தாமல் நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சேலம் மாவட்ட கணவாய்புதூர் ஊராட்சியை தர்மபுரி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அரசியல் ஒப்பந்தத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கண்ட கோரிக்கைகளை வாக்குறுதியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
கூட்ட நிகழ்வுகளை பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் நல சங்கம் தலைமையேற்றது. சங்கத் தலைவர் திரு. ஆசாம்கான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் திரு. பா. ஜெபசிங் கோரிக்கைகளை விரிவாக விளக்கினார். சட்ட ஆலோசகர் திரு. ஹரிஷ் சட்டரீதியான வழிகாட்டுதலை வழங்கினார். பொருளாளர் திரு. முனிரத்தினம் நன்றி கூறினார். சங்க துணைத் தலைவர் திருமதி. A. சங்கீதாஸ்ரீ, துணைப் பொருளாளர் திரு. கார்த்திகேயன், துணைச் செயலாளர் திரு. சிவக்குமார், ஆலோசனை குழு உறுப்பினர்கள் திரு. S. சுரேஷ், திரு. வெங்கடேசன், திரு. குமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
1861 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வர்த்தக நோக்கில் பொம்மிடியில் பிரமாண்டமான ரயில் நிலையத்தை அமைத்த வரலாறு கூட்டத்தில் நினைவுகூரப்பட்டது. ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து விளைபொருட்களை கொண்டு செல்லவும், கோடை விடுதிக்கு பயணிகளை அழைத்துச் செல்லவும் அமைக்கப்பட்ட இந்த நிலையம், ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்திருந்தால் மாவட்டமாக உயர்த்தப்பட்டிருக்கும் என கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
இக்கூட்டம், 1947க்குப் பிறகு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த பொம்மிடி பகுதி வளர்ச்சிக்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இடைப்பட்ட மலைக்கிராமங்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 75 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வலுவான அடித்தளமாகவும், அனைத்து கட்சிகளின் ஒற்றுமை முயற்சிகளுக்கான தொடக்கமாகவும் இந்த ஆலோசனை கூட்டம் பார்க்கப்படுகிறது.