பாலக்கோடு, ஆக.06 | ஆடி 21 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மூங்கப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா, இந்தாண்டும் பக்தி பூர்வமாக, உற்சாகமுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா கடந்த திங்கட்கிழமை கணபதி பூஜையுடன் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் பக்தர்களின் கலந்து கொள்ளும் சிறப்புடன் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற முக்கிய திருநாளில், அதிகாலை முதலே அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள தமக்களப்பன் சுவாமி, முனியப்பன் சுவாமி, கொல்லாபுரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அங்கிருந்து பெண் பக்தர்கள் கரகம், மாவிளக்கு எடுத்தும், அம்மன் வேடம் அணிந்து, மேளதாள இசை முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயிலைச் சேர்ந்தனர்.
பொங்கல் வைத்து வழிபாடுகளும், நேர்த்திக்கடனாக கோழி, கிடா போன்ற பலிகளும் செலுத்தப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அருள் பாலிக்கும் அம்மனை தரிசித்து தங்கள் விருப்பங்களை தெரிவித்து வேண்டுதல்கள் செய்தனர். இந்த திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளும் ஊர்கவுண்டர், மந்திரி கவுண்டர், நாட்டு கவுண்டர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.