பாலக்கோடு, ஆக.06 | ஆடி 21 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கணபதி நகரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அச்சம்மன் கோயிலில் வருடாந்திர திருவிழா, கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தி சிறப்புடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, திருவிழாவின் முக்கிய நாளான நேற்று, அதிகாலை முதலே அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்று, அழகான அலங்காரத்தில் அச்சம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில், பெண் பக்தர்கள் கரகம் மற்றும் மாவிளக்கு எடுத்தும், அம்மன் வேடம் அணிந்து, இசை முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். மேலும், பொங்கல் வைத்து, கோழி மற்றும் கிடா ஆகியவற்றை பலியிட்டு தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர், ஊர்கவுண்டர்கள் ஜெயவேல், ரவி, சின்னசாமி, சங்கர், நாகராஜி, முருகன், மாதையன், கோவிந்தசாமி, முருகேசன், முனுசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் அருளைப் பெற்றனர்.