பாலக்கோடு, ஆகஸ்ட் 13 | ஆடி 27 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செம்மநத்தம் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா கடந்த திங்கட்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று, அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண் பக்தர்கள் கரகம், மாவிளக்கு எடுத்தும், அம்மன்வேடம் அணிந்தும், மேளதாளங்கள் முழங்க வீதி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.
பக்தர்கள் பொங்கல் வைத்து, கோழி மற்றும் கிடா பலி செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், ஊர் கவுண்டர் சின்னபையன், மந்திரி கவுண்டர் நாகராஜ், சரவணன் முத்துவேல், மணியரசு, அரிமா பாய்ஸ் குழுவினர் மற்றும் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.