பாலக்கோடு, ஆகஸ்ட் 17 (ஆடி 31):
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எலுமிச்சனஅள்ளி காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனசரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறை பணியாளர்கள் சங்கர், கதிரவன், மாரிசாமி, கார்த்திக், விஜயகுமாரி, அருணா, பவித்ரா, பூபதி, சின்னதம்பி, சத்திவேல் உள்ளிட்டோர் இணைந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.
கண்காணிப்பில், எலுமிச்சனஅள்ளி காப்புக்காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் வாக்கன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நந்தன் (25), சக்திவேல் (27) என தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த வனத்துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர் ராஜங்கம் பரிந்துரையின் பேரில் தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். “வனவிலங்குகளை வேட்டையாட முயல்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.