பாலக்கோடு, ஆகஸ்ட் 13 | ஆடி 27 –
தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், மேலும் மாரண்டஅள்ளி மற்றும் வெள்ளிசந்தை வருவாய் துறை அலுவலகங்கள் முன்பு, வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டக் குழு தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் மாரிமுத்து, முத்து, வட்டக் குழு நிர்வாகி நக்கீரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பாலக்கோடு, காரிமங்கலம் தாலுக்கா பகுதிகளில் வசிக்கும் வீடற்றோருக்கு பட்டா வழங்க 6 மாதங்களுக்கு முன் மனுக்கள் அளித்தும், வருவாய் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.