தருமபுரி, ஆக.06 | ஆடி 21 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் இன்று (06.08.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாரியத்தலைவர் முனைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமை வகிக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, தாட்கோ மற்றும் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கான நலஅட்டைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில்,
-
40 நபர்களைச் சேர்ந்த குழுக்களுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவிகள்,
-
4 நபர்களுக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைகள்,
-
2 நபர்களுக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர், வாரியத் தலைவர் முனைவர் ஆறுச்சாமி அவர்கள் பேசும்போது, “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்துடன் கூடிய ESI மற்றும் PF அம்சங்கள் கொண்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒப்பந்தத் தூய்மை பணியாளர்களின் குறைகள் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது” எனக் கூறினார்.
தாட்கோ திட்டத்தின் கீழ், தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு கல்வி, வாழ்க்கைத் துணை, தொழில் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவை திட்டமிட்ட வகையில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.