தருமபுரி துறைசாலை பகுதியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் திட்டம், தருமபுரி கிளை மற்றும் பெரியார் பல்கலைக்கழகமும் இணைந்து “Workshop on Flagship Schemes” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிலரங்கம் 06.08.2025 புதன்கிழமை அன்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொறுப்பு) முனைவர் செல்வபண்டியன் அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்வுக்கு முன்னதாக காமராஜர் பகத்சிங் இளைஞர் நற்பணி சங்க செயலாளர் கபில்தேவ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பயிலரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, திறன் மேம்பாட்டு அலுவலர் சந்திரா, இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குனர் கௌரி, இந்திய அஞ்சல் துறை மேற்பார்வையாளர் கீதா, ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் குமரன், தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் கடன் வழிகாட்டி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவர்கள் தங்கள் துறைகளைச் சேர்ந்த முக்கியத்துவமான திட்டங்கள், அரசு உதவித்தொகைகள், மாநியங்கள், சுயதொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விரிவாக பகிர்ந்தனர்.
மேலும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பயிலரங்கினை பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் ஒருங்கிணைத்தார். மை பாரத் திட்டத்தின் தேசிய இளைஞர் தொண்டர்கள் மஞ்சுளா மற்றும் சுகன்யா ஆகியோர் நிகழ்வின் ஒழுங்காற்றத்தில் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். நிகழ்வின் இறுதியில் மை பாரத் தருமபுரியின் பல்நோக்கு பணியாளர் ரா.முனியப்பன் நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.