தருமபுரி, 11 ஆகஸ்ட் 2025 | ஆடி 26 -
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கிங்டம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை திரையிடக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முன்பே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி தருமபுரி டி-மேக்ஸ் மல்டிப்ளெக்ஸ் மற்றும் சந்தோஷ் திரையரங்குகளில் கிங்டம் திரைப்படம் திரையிடப்படும் என பேனர்கள் வைக்கப்பட்டது. இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் திரையரங்குகளின் முன்பு திரையிடலை தடை செய்யுமாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திரையரங்கு நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் இன்று மீண்டும் அந்த திரைப்படம் திரையிடப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர், திரையரங்கின் முன்பு திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பி அமர்ந்து தர்ணா நடத்தினர். இதில் சிலர் திரையரங்கிற்குள் நுழைந்து கோஷங்களை எழுப்பியதால், காவல் துறையினர் தடுத்து வெளியே கொண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், கிங்டம் திரைப்படம் திரையரங்கில் இனி ஒளிபரப்பப்படாது என நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.