தருமபுரி, 11 ஆகஸ்ட் 2025 | ஆடி 26 -
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட (மன்ரேகா) தொழிலாளர் சங்கம் சார்பில், தருமபுரி ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ. பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலை அட்டை பெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும், அரசு நிர்ணயம் செய்த தினசம்பளமான ரூ.336-யை முழுமையாக வழங்க வேண்டும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2,151 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் சங்க பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான பைசுஅள்ளி, ஜி. மாதையன், அதகப்பாடி ஜி. பச்சாகவுண்டர், வத்தல்மலை ராஜகோபால், இலட்சுமணன், பாப்பம்மாள், இலளிகம் எல்.சி. கிருஷ்ணன், அலமேலு எத்துராஜ், நார்த்தம்பட்டி என்.பி. ராஜி, வெங்கடம்பட்டி வெ.பை. மாதையன், ஏலகிரி ஜி. சம்பத், வி. செல்வம், தடங்கம் மாரியப்பன், கோடுஅள்ளி முண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். இறுதியில் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரதாபன் சிறப்புரையாற்றினார்.