பாலக்கோடு, ஆக 04 | ஆடி 19-
தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் பல வாகனங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் போன்ற பகுதிகளுக்கு பயணிக்கின்றன. இந்நிலையில், பாலக்கோடு–தருமபுரி நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிடும் போது சாலையோரம் செல்லும் நிலையில், பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாலக்கோடு–ஓசூர், பாலக்கோடு–கிருஷ்ணகிரி, காரிமங்கலம் செல்லும் சாலையோரங்களில் முட்செடிகள் மற்றும் காட்டுமரங்கள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.
அத்துடன், மழைக்காலங்களில் பாலக்கோடு தக்காளி மண்டியில் இருந்து பாப்பாரப்பட்டி கூட்ரோடு வரை, மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் தேங்கி, வாகனங்கள் செல்லும் போது பயணிகளின் மேல் தெறிகிறது. இதனால், கைகள், கால்கள் மற்றும் உடலில் அலர்ஜி, தோல் நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பாலக்கோடு நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.