பாலக்கோடு, ஆக 04 | ஆடி 19 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில், மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். உள்ளூர் விவசாயிகள் தெரிவித்ததாவது: தூள் செட்டி ஏரி மற்றும் என்னேகொல்புதூர் கால்வாய் திட்டங்கள் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அவை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், பாலக்கோடு மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை நீடிக்கிறது.
ஓகேனக்கல்லில் போதுமான நீர்வரத்து இருந்தாலும், அந்த நீரை பாசன மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் திட்டங்கள் செயல்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், முந்தைய தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் வழங்கிய நீர் திட்டங்களை நிறைவேற்றும் உறுதிமொழிகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, தூள் செட்டி ஏரி, என்னேகொல்புதூர் கால்வாய் திட்டம் மற்றும் ஓகேனக்கல் உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.