தருமபுரி, ஆக 4 | ஆடி 19 -
இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மொத்தம் 446 மனுக்கள் வரப்பெற்றன. இதில் சாலை வசதி, குடிநீர், பேருந்து வசதி, பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசுச் சான்று, வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும்.
மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மக்கள் கோரிக்கைகளுக்கு தமிழக முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்து, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தின் போது, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பறையப்பட்டி கோபிநாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த, இயற்கை எய்திய ஒருவரின் வாரிசுகளுக்கு, பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.35,000 நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்களுடன் கூடிய சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. செம்மலை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. ஆ.க. அசோக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி வள்ளி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.