Type Here to Get Search Results !

திமுக அரசு தருமபுரி மக்களுக்கு துரோகம் செய்கிறது – பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் கடும் குற்றச்சாட்டு.


தருமபுரி, ஆகஸ்ட் 17, 2025 (ஆவணி 01) –


தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம் தொடர்பாக திமுக அரசு காட்டும் நிலைப்பாடு தருமபுரி மக்களுக்கு பெரும் துரோகம் என பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மத்துடன் செயல்பட்டு வருகிறார். இதனை எங்கள் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த முடியாது என கூறுவது, மாவட்ட மக்களின் உரிமைகளை தாரைவார்ப்பது போலவே உள்ளது. கர்நாடகத்துக்கே சாதகமாக இருக்கும் வாதங்களை அமைச்சர் முன்வைப்பது திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், “தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்திற்கு தேவைப்படும் நீர் வெறும் 3 டி.எம்.சி மட்டுமே. அது வெள்ளக் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரிலிருந்து எடுக்கப்பட வேண்டியது தான். இது புதிய பாசனப் பரப்பை உருவாக்குவதில்லை; ஏற்கனவே உள்ள நிலங்களுக்கு பயனளிக்கும் திட்டம். இந்நிலையில், திட்டம் செயல்படுத்த இயலாது என்ற பன்னீர்செல்வத்தின் வாதம் முற்றிலும் தவறு. மேட்டூர் உபரி நீர் திட்டம், காவிரி – குண்டாறு திட்டம் கூட இதே தர்க்கத்தால் செயல்படுத்த இயலாது என்று சொல்ல வேண்டியிருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.


திமுக அரசு தருமபுரி மாவட்டத்தை புறக்கணித்து வருவதாகவும், இதற்கான சான்றுகள் இன்று நடந்த விழாவில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “தருமபுரி சிப்காட், தருமபுரி – மொரப்பூர் ரயில்பாதை நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை முன்னேற்ற இயலவில்லை என்பதை அமைச்சர் பன்னீர்செல்வம் தானே ஒப்புக்கொண்டுள்ளார். இதுவே திமுக அரசின் தோல்வி. தருமபுரி மக்களை துரோகம் செய்கிற இந்த அரசை மக்கள் வரவிருக்கும் தேர்தலில் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்” என அவர் வலியுறுத்தினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies