தருமபுரி, ஆக.18 | ஆவணி 2 –
“தருமபுரியை புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி திமுக கூட்டணிக்கு எப்படி கிடைத்திருக்கும்?” என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை வெறும் அவதூறு என்றும், திராவிட மாடல் அரசு எந்தப் பாகுபாடும் இன்றி தருமபுரியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதைத் திட்ட முன்னேற்றம்
அன்புமணி முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், தருமபுரி – மொரப்பூர் புதிய அகல ரயில் பாதைத் திட்டத்திற்கான நிர்வாக அனுமதி 2023 ஏப்ரல் மாதமே வழங்கப்பட்டதாகக் கூறினார். இதுவரை 78.54 ஹெக்டேர் நிலங்களில் 60 விழுக்காடு நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. 2000-க்கும் மேற்பட்ட பட்டாதாரர்களுக்கு ரூ.29 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களைச் சீரமைத்து விரைவில் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் விளக்கினார்.
காவிரி உபரி நீர் திட்டம்
காவிரி உபரி நீர் திட்டத்தைப்பற்றி பேசுகையில், காவிரி வடிநிலப் பகுதியிலிருந்து புதிய பாசனப்பரப்பை உருவாக்க இயலாது என தீர்ப்பாயம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் தீர்மானிக்கப்பட்ட பின்னரே புதிய நீரேற்று திட்டங்கள் சாத்தியமாகும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
சிப்காட் தொழிற்பூங்கா வளர்ச்சி
சிப்காட் தொழிற்பூங்கா குறித்த குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார். தருமபுரி தொழிற்பூங்காவின் முதல்கட்டப் பணிகள் ரூ.12.39 கோடி மதிப்பில் நிறைவு பெற்றுள்ளன. அடுத்த கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு பணிகள் ரூ.93 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இணையதளம் மூலம் தொழில் முனைவோருக்கான நில ஒதுக்கீடு நடைபெற்று வருகிறதுடன், இதுவரை ஏழு நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றப் பங்கேற்பு விவரம்
அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் மக்களின் நலனுக்காக எவ்விதப் பலனையும் பெற்றுத் தரவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர், கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த 304 நாட்களில் வெறும் 92 நாட்கள் மட்டுமே அவர் அவைக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார். அதாவது, அவரது வருகைப் பதிவு சதவிகிதம் 30% மட்டுமே எனவும் சுட்டிக்காட்டினார்.
தன் கட்சியிலேயே நிலைத்தன்மை இல்லாமல் பதற்றத்தில் இருக்கும் அன்புமணி, உண்மைத் தகவல்களை அறியாமல் அரைவேக்காட்டு அறிக்கைகள் வெளியிடுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சித்தார். தருமபுரியைப் புறக்கணிக்காமல், சமமான வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், இதை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.gif)

