தருமபுரி, ஆக.8 | ஆடி 23 -
தருமபுரி அரசு மருத்துவமனைக்கு எதிரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக “மை தருமபுரி” அமைப்பு, பசிக்குதா வாங்க சாப்பிடுங்க எனும் அன்னதான சேவை திட்டத்தின் மூலம் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கும், பசியால் வாடும் பொதுமக்களுக்கும் தினமும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலம் சராசரியாக தினசரி ஆயிரம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் விரிவாக்கமாக, காலை வேளைகளில் மருத்துவமனை நோயாளிகளுக்கு நொய்கஞ்சி வழங்கும் புதிய சேவை திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மை தருமபுரி அறக்கட்டளை, எண்ணங்களின் சங்கமம், V4U அறக்கட்டளை, மற்றும் காமதேனு சாரிட்டீஸ் ஆகிய சமூகநல அமைப்புகள் இணைந்து தொடங்கியுள்ளன. திட்டத்தின் துவக்க நிகழ்வில், மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் சி.கே.எம். ரமேஷ், நகராட்சி மக்கள் நல அலுவலர் இலட்சியவர்னா, எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் திட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.