பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.8 | ஆடி 23 -
2025–26 கல்வியாண்டிற்கான பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் மோளையானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. மொத்தம் 62 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றன. இந்தப் போட்டிகளில் கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாகப் பங்கேற்று, ஜூனியர் கபடி, சூப்பர் சீனியர் கபடி, செஸ், சிலம்பம் போன்ற பிரிவுகளில் முதலிடம் பெற்றனர். வளையப்பந்து, வாலிபால், எறிபந்து, கோ-கோ, கேரம் போன்ற பிரிவுகளில் இரண்டாம் இடமும் பெற்றனர்.
தடகளப் போட்டிகளில் 19 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களை வென்ற இம்மாணவிகள், 95 வெற்றி புள்ளிகளுடன் தொடர்ந்து 18வது ஆண்டாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். மேலும், ஜூனியர் பிரிவில் ஆர். கனிஷ்கா மற்றும் சீனியர் பிரிவில் தர்ஷனா ஆகியோர் தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றினர்.
பரிசளிப்பு விழாவில், மேனாள் உயர்கல்வி துறை அமைச்சர் திரு. பழனியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதி சந்திரா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பதக்கங்களையும் கோப்பைகளையும் வழங்கினர். இத்தகைய வெற்றிக்கு பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் இராஜேந்திரன் மற்றும் தென்றல் ஆகியோரை விழா மேடையில் சிறப்பாக பாராட்டினர்.