ஒகேனக்கல், ஆக. 31 | ஆவணி 15 ;
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர்மட்டம் பெருகியுள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைந்திருந்தாலும், தமிழக காவிரி கரையோரங்களில் பெய்த மழை காரணமாக நேற்று வரை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 24 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. மதியம் நிலவரப்படி மேலும் அதிகரித்து 28 ஆயிரம் கன அடியாக பதிவாகியுள்ளது.
இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் முழு வேகத்தில் ஆர்ப்பரித்து விழுந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்தன. எனினும், அதிகரித்த நீர்வரத்து காரணமாக, ஆற்றுப்பகுதி, நீர்வீழ்ச்சி பகுதிகளில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெருமளவிலான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்திருந்தனர். ஆனால் தடை காரணமாக குளியல் மற்றும் படகு சவாரி அனுமதி மறுக்கப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.