தருமபுரி –ஆகஸ்ட் 08, 2025 | ஆடி -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்ட அரங்கில், மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.08.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கடந்த ஆண்டு பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இம்முறை பெறப்பட்ட 41 மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுதாரர்களுக்கு நேரடியாக பதில் வழங்கினர். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்படும் சேவை குறைபாடுகள் இனி தவிர்க்கப்பட வேண்டும் என, யுனைட்டட் இன்சூரன்ஸ் கம்பெனியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிளை மேலாளருக்கு அவர் அறிவுறுத்தினார். மருத்துவ காப்பீடு தொடர்பான சிக்கல்களை தீர்க்க, கருவூல அலுவலர், மருத்துவ அலுவலர் மற்றும் ஓய்வூதிய சங்கத்துடன் இணைந்து மாதந்தோறும் சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், சிக்கலான பிரச்சினைகள் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. கவிதா, ஓய்வூதிய இயக்கக் கூடுதல் இயக்குநர் திரு. அர்ஜுனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு. வே. சேகர், நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா மற்றும் பல அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.