தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (31.08.2025 – ஆவணி 15) பெங்களூரைச் சேர்ந்த தனியார் ஐடி நிறுவன மேலாளர் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஜோதி ரகுராமையா என்பவரின் மகன் ஜோதி கிருஷ்ணா காந்த் (வயது 30) பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், தனது நான்கு நண்பர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்திருந்தார்.
அங்கு சுற்றுலா தளங்களைப் பார்த்த பின்னர், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், அவர் நண்பர்களுடன் சின்னாறு பரிசல் துறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் குளிக்கச் சென்றார். அப்போது கிருஷ்ணா காந்த் மற்றும் இன்னொருவர் ஆழமான பகுதியில் சிக்கினர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒருவரை நண்பர்கள் காப்பாற்றிய நிலையில், ஜோதி கிருஷ்ணா காந்தை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக தகவல் தரப்பட்டதைத் தொடர்ந்து, ஒகேனக்கல் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை மீட்டனர். பின்னர் உடல் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.