பாலக்கோடு, ஆகஸ்ட் 16 |ஆடி 31 –
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஜெர்தலாவ், பேளாரஅள்ளி, பி.செட்டியள்ளி, எர்ரணஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. பனந்தோப்பு கிராமத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் விக்னேஷ்வரி, உதவி அலுவலர்கள் சங்கீதா, பூர்ணிமா ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற செயலாளர்கள் சஞ்சீவன், கோவிந்தன், முருகேசன் ஆகியோர் பஞ்சாயத்து வரவு-செலவு கணக்குகள் மற்றும் நடப்பில் உள்ள திட்டப் பணிகளை வாசித்தனர்.
இக்கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டம் பயனாளிகளின் பட்டியலைத் தேர்வு செய்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல், தூய்மையான குடிநீர் வழங்கல், குளங்கள் மற்றும் ஏரிகளைப் புதுப்பித்தல், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், வீடுவீடாக குப்பைகளை பிரித்து வழங்குதல், மழைக்கால நோய்களைத் தடுக்கும் சுகாதார மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.