பாலக்கோடு, ஆகஸ்ட் 15 | ஆடி 31–
பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு முன்பு (1994–1999) வரை முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. 1999 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு முடித்த 60 மாணவ–மாணவிகள் ஒன்று கூடி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்பிக்க வந்த ஆசிரியர்களை மீண்டும் கேட்டு மகிழ்ந்தனர். கூடுதலாக, பள்ளிக் காலத்தை நினைவு கூறும் விதமாக, குறும்புத்தனங்கள் செய்தபோது ஆசிரியர்களிடம் கண்டிப்பும் அடியும் பெற்ற அனுபவங்களை சிரிப்போடு மீண்டும் நினைவு கூர்ந்தனர்.
இந்நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து பள்ளியில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், 10 டெஸ்க் மற்றும் பென்சுகள் வழங்கினர். மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
அதேபோல், தங்களுக்குப் பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர்களும், தற்போது பணியாற்றும் ஆசிரியர்களும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு, பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நினைவாக அமைந்தது.