பென்னாகரம், ஆகஸ்ட் 16 | ஆடி 31 –
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக உழைத்த தூய்மை பணியாளர்களின் உரிமையை பறிக்கும் விதமாக அரசு நடந்து கொள்வது துரோகம் எனக் கண்டித்தார். மாவட்ட செயலாளர் தோழர் சிவா, தூய்மை பணியாளர்களின் மீது போலீசார் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாகும் என்றும், உரிமை கேட்ட தொழிலாளர்களை குற்றவாளிகள் போல நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
வட்டார துணைச் செயலாளர் மாரியப்பன், காவல்துறை நாடு முழுவதும் தொழிலாளர்களின் குரலை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், தூய்மை பணியாளர்கள் செய்யும் சேவை சமூகத்திற்கு அவசியமானது என்றாலும், அவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், தனியார்மய கொள்கைகள் தொழிலாளர்களை சுரண்டுகின்றன என்றும் வலியுறுத்தினார்.
மாநில இணைச் செயலாளர் கோபிநாத், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை போலீசார் கலவரமாக்கியதாகவும், ராம்கி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட குப்பை சேகரிப்பு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு துரோகம் எனவும் கூறினார். உயர்நீதிமன்றம் வழங்கிய தினசரி 700 ரூபாய் சம்பளத்தை வழங்க மறுப்பது திமுக அரசின் நேரடி பொறுப்பு என்றும், பணி நிரந்தரம் செய்யாமல் உயிரிழந்த பின் இழப்பீடு அளிப்பது தொழிலாளர்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தூய்மை பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தரம் உடனடியாக செய்யப்பட வேண்டும், ராம்கி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு குப்பை சேகரிப்பு ஒப்பந்தங்களை வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், வட்டார குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி நன்றி உரையாற்றினார்.