பாலக்கோடு, ஆக 08 | ஆடி 23 -
தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்பட்டி ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த முறையை ஒழித்து, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
சங்கத்தினர், தமிழக அரசு தற்போது பல துறைகளில் தொகுப்பூதிய, மதிப்பூதிய, அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் போன்ற முறைகளை அமல்படுத்தி வருவதாகவும், இவை “கொத்தடிமைக் கூலி” முறை என்றும், இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், தேர்தல் கால வாக்குறுதிப்படி சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், வன பாதுகாவலர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், பயிற்றுநர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கோரினர்.
ஆர்ப்பாட்டத்தில் வருவாய்துறை ஊழியர் சங்க வட்ட தலைவர் ரஞ்சித், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், வட்ட செயலாளர் குணசேகரன், வட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் தெய்வானை, இணை செயலாளர் மீன் முருகன், வட்ட செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் தினமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைமை வகித்த அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அன்பழகன், பொதுநூலகத்துறை மாநில தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.