தருமபுரி, ஆக 06 | ஆடி 31 -
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாகனம் இன்று (06.08.2025) கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு, "வாருங்கள், செறிவூட்டப்பட்ட அரிசியைப் பற்றி அறிந்து கொள்வோம்" என்ற வாசகத்துடன் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
இந்த வாகனம் SBCC (Social Behaviour Change Communication) முயற்சியின் கீழ் செயல்படுகிறது. இதில், மக்கள் நடத்தை மாற்றம் மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்தப்படும். தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் படி, நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சினைகள் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். இதனைத் தடுக்கும் நோக்கில் செறிவூட்டப்பட்ட அரிசி, கோதுமை, பால், எண்ணெய் மற்றும் உப்பு போன்றவை பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது அரசு ரேஷன் கடைகள், பள்ளி மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றில் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் சுற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தருமபுரி பட்டுக்கூடு அங்காடி ஆய்விலும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். தினசரி விலை பட்டியல்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் பட்டு வளர்ப்பு நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார்.
நிகழ்வில் நகர்மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட நியமன அலுவலர் பி.கே.கைலாஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. லோகநாதன், பட்டு வளர்ச்சி உதவி இயக்குநர் சி. ரங்கபாப்பா, நகராட்சி ஆணையர் சேகர் உள்ளிட்ட பல அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை பணியாளர்கள், அரிசி ரைவை மில் உரிமையாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.